பிறப்பெடுக்கும் மனித உயிர் அனைத்தும் முதலில் அறிவது இனிப்பு சுவைதான். ஒரு துளி இனிப்போடுதான் நம் வாழ்வின் பயணம் துவங்குகிறது. இனிப்புகள் நமது உணவு முறைகளிலும் ஒட்டுமொத்த உணவுத் தொழிலிலும் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தாய் தனது பிள்ளைகளை இனிப்பாய் கொஞ்சுவதும், முரட்டுத்தனம்  மிகுந்த, குறும்பான காதலனை சுவீட் ராஸ்கல் என்றும், தன் காதலியை உலகில் இருக்கும் அனைத்துவிதமான இனிப்பு பண்டங்களுடன் ஒப்பீடு செய்வதும்.

எந்த ஒரு உணர்வுகளையும், நிகழ்வுகளையும், உறவுகளையும் இனிப்போடு ஒப்பீடு செய்வதே நம் சமூகத்தின் வழக்கம், இனிப்பான வாழ்க்கை, இனிப்பான வார்த்தை, இனிய பயணம், இனிய உறவுகள், இனிய நினைவுகள், இனிய துணை… இனிய இனிப்பான, இனிமையான, எத்தனை எத்தனை இனிய ஒப்பீடுகள்.

கற்பனையாக இருந்தாலும், ஆதாம் கடித்த ஆப்பிள்தான் மனிதன் முதன் முதலில் சுவைத்த இனிப்பாக இருக்கும், உண்மையில் இனிப்பின் ரிஷிமூலம் என்ன அதன் நதி மூலம் என்ன. 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழங்கால மனிதர்கள் பழங்கள் மற்றும் தேனை இனிப்புப் பொருளாகப் பயன்படுத்தியதாக தொல்லியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.

காலப்போக்கில், கரும்பு, பேரீச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் போன்ற இயற்கையான இனிப்புகளைக் கொண்ட தாவரங்களை மனிதர்கள் பயிரிட்டு வளர்க்கத் தொடங்கினர். இந்த தாவரங்கள் இந்தியா, பெர்சியா மற்றும் மத்திய தரைக்கடல் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வளர்க்கப்பட்டன.

கரும்பிலிருந்து சர்க்கரை பிரித்தெடுக்கப்படுவது கிமு 350 இல் இந்தியாவில் தோன்றியதாக நம்பப்படுகிறது. பண்டைய இந்தியாவில், அது “ஷர்காரா” என்று அறியப்பட்டது. சர்க்கரை பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு பற்றிய அறிவு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் பரவியது, அங்கு அது ஒரு முக்கியமான தொழிலாக மாறியது. அரேபியர்கள் இடைக்காலத்தில் ஐரோப்பாவிற்கு சர்க்கரையை அறிமுகப்படுத்தினர், மேலும் அது பிறகு செல்வந்தர்களுக்கு ஒரு ஆடம்பரப் பொருளாக மாறியது.

16 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் கரும்புகளை பயிரிடுவதற்கும் பதப்படுத்துவதற்கும் அடிமைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி, அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் கரும்புத் தோட்டங்களை நிறுவத் தொடங்கினர். இது சர்க்கரையின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுத்தது, அதன்பின் தான் சர்க்கரை அனைவருக்குமான உணவுப் பண்டமாக மாறியது

19 ஆம் நூற்றாண்டில், விஞ்ஞானிகள் பீட்ஸில் இருந்து சர்க்கரையைப் பிரித்தெடுப்பதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்தனர், இது ஐரோப்பாவில் சர்க்கரை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்ப்படுத்தியது. கூடுதலாக, 20 ஆம் நூற்றாண்டில் சாக்கரின்(saccharine) மற்றும் அஸ்பார்டேம் (aspartame) போன்ற செயற்கை இனிப்புகளின் கண்டுபிடிப்பு, குறைந்த கலோரி இனிப்பு (Low Calorie Sweet) உற்பத்தி முறை மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக மாறியது.

இனிப்பாய் இயற்க்கை நமக்கு அள்ளித்தரும் எத்தனை எத்தனை பழ வகைகள் ஒரு காலத்தில் இனிப்பிற்க்காக பழங்களை மட்டும் உண்டுகொண்டிருந்த மனிதன் எப்படி எல்லம் இனிப்பு வகைகளை தயாரிக்க துவங்கி இருப்பான்.

யோசித்துப்பாருங்கள் உலகம் முழுவதும் எத்தனை எத்தனை வகையான இனிப்பு உணவுகள் தயாரித்து விரும்பி உண்ணப்படுகிறது, இனத்திற்க்கும் இனம், மொழிக்கு மொழி, ஊருக்கு ஊர் எத்தனை எத்தனை இனிப்பு வகைகள்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உணவு பிரசித்தம் முக்கியமாக இனிப்பு வகைகள்.

லட்டு, மைசூர்பாகு, ஜிலேபி, அல்வா, கேசரி, குலாப் ஜாமூன், ரசகுல்லா, அதிரசம், பால்கோவா, பாதுஷா, பர்ஃபி, சோன்பப்டி, பாயாசம்… இன்னும் இன்னும் எண்ணிவிட முடியுமா?

அதெல்லம் ஒரு புறம் இருக்க அடுத்த வந்த மிக முக்கிய கண்டுபிடிப்பு, சாக்லெட் (Chocolate)

மற்ற இனிப்பு பண்டங்கள் விரும்பாதவர்கள் கூட சாக்லெட் எனும் இந்த மந்திர உணவின் மீது தீராக் காதல் கொண்டவர்களாகவே இருப்பார்கள். “xocolatl” என்ற வார்த்தையில் இருந்து வந்ததுதான் சாக்லெட்,  மாயர்கள் நாகரிகத்தில் துவங்கிய இந்த சாக்லெடின் பயணம் இன்று மல்டி பில்லியன் டாலர்கள் வாரிக்குவிக்கிறது. சாக்லேட் பார்கள், மிட்டாய்கள், கேக்குகள், ஐஸ்கிரீம் மற்றும் பல பல வடிவங்களில் வரும் சாக்லெட் பற்றி இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

நல்ல விஷயங்கள் துவங்கும் முன் ஸ்வீட் சாப்பிடவும், ஸ்வீட் எடு கொண்டாடு என்று சொல்லியும் பழக்கப்படுத்தியது நம் சமூகம், விழாக்காலங்களில் அம்மா தயாரிக்கும் லட்டு, மைசூர்ப்பாவும் மற்றும் இதர இனிப்பு வகைகளும் நமக்கு அள்ளித்தரும் இனிய நினைவுகளை.

எப்படி எல்லாம் நம்மை ஆட்டுவித்து ஆட்கொண்டிருக்கிறது இந்த BLOODY SWEET.

அடுத்தடுத்து பயணிப்போம் இந்த இந்த BLOODY SWEET உடன்.

Share.
Leave A Reply