டாடா குழுமத்தின் உச்ச நிர்வாகத்தில் மீண்டும் ஒரு பெரும் கார்ப்பரேட் மோதல் வெடித்துள்ளது. டாடா சன்ஸ் அமைப்பின் நிர்வாகத் தலைவரான N. சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு, டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

வரும் பிப்ரவரி 2027-டன் தனது பதவிக்காலம் முடிவடையும் நிலையில், சந்திரசேகரன் தான் மீண்டும் தலைவராகத் தொடர விரும்பவில்லை என ஆகஸ்ட் 12, 2026 அன்று அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அளித்திருந்தார். இதனை டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவும் ஏற்றுக்கொண்டு, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளையும் தொடங்கியது. ஆனால், தற்போது 4-1 என்ற பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் சந்திரசேகரனுக்கே மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்க டாடா சன்ஸ் குழு முடிவு செய்துள்ளது.

இந்த திடீர் முடிவைச் சாடியுள்ள நோயல் டாடா, ஏற்கனவே சந்திரசேகரனின் முடிவை ஏற்றுக்கொண்ட பிறகு, மீண்டும் அவரை நியமிக்க நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் முற்றிலும் “சட்டவிரோதமானது” (Illegal) என்று தெரிவித்துள்ளார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரை நியமிக்க 66% பங்குகளை வைத்துள்ள டாடா டிரஸ்ட்ஸின் ஒப்புதல் கட்டாயம் தேவை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சட்டரீதியாக சந்தேகத்திற்குரிய ஒருவரை மீண்டும் தலைவராக நியமிப்பது, எதிர்காலத்தில் பெரிய சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி (RBI) டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக (Listed Entity) மாற்ற உத்தரவிட்டுள்ள நிலையிலும், அதைத் டிரஸ்ட்ஸ் எதிர்த்து வரும் சூழலிலும் இந்த மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. நிறுவனத்தின் பங்குச்சந்தை பட்டியலிடலைச் மென்மையாகக் கையாளவே சந்திரசேகரனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஒழுங்குமுறை மாற்றங்களையும் (Regulatory developments) தலைமைத்துவ மாற்றத்தையும் ஒன்றாகக் குழப்பிக்கொள்ளக் கூடாது என நோயல் டாடா தெளிவுபடுத்தியுள்ளார்.

“தலைவர் தனது முடிவைத் தெரிவித்துவிட்டார்; பங்குதாரர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். இனி அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதே சரியானது” என்று கூறி, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை நோயல் டாடா அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version