தென்னிந்திய சைவ உணவகத் துறையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள ‘அடையார் ஆனந்த பவன்’ (A2B), முதலீட்டு நிறுவனமான ‘போதி ட்ரீ சிஸ்டம்ஸ்’ (Bodhi Tree Systems – BTS) உடன் இணைந்து செயல்பட உள்ளது. A2B நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளைப் பெறுவதற்காகப் போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் 180 மில்லியன் டாலர் முதலீடு செய்ய முன்வந்துள்ளது, வணிக வட்டாரங்களில் முக்கிய கவனம் பெற்றுள்ளது.
போதி ட்ரீ சிஸ்டம்ஸ் பின்னணி
ஊடகத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஜேம்ஸ் முர்டோக் (James Murdoch) மற்றும் உதய் சங்கர் (Uday Shankar) ஆகியோரால் இணைந்து தொடங்கப்பட்ட முதலீட்டு நிறுவனமே போதி ட்ரீ சிஸ்டம்ஸ். இந்தியாவின் நுகர்வோர் மற்றும் ஊடகச் சந்தைகளில் முதலீடு செய்து வரும் இந்நிறுவனம், தற்போது உணவகத் துறையிலும் கால்பதிக்கிறது.
ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் இந்த ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. இதன் அடிப்படையில், A2B நிறுவனத்தின் புதிய இயக்குநர்கள் குழுவின் (Board of Directors) தலைவராக உதய் சங்கர் பொறுப்பேற்க உள்ளார்.
நிறுவனர்களின் பங்கு தொடருமா?
பெரும்பான்மைப் பங்குகள் (Majority Stake) முதலீட்டு நிறுவனத்திற்குச் சென்றாலும், நிறுவனர் குடும்பத்தினர் நிர்வாகத்திலிருந்து முழுமையாக விலகவில்லை. இது இரு தரப்பினருக்கும் இடையிலான கூட்டு முயற்சியாகவே அமைந்துள்ளது.
A2B நிறுவனத்தின் இணை நிறுவனர்களும் சகோதரர்களுமான கே.டி. ஸ்ரீனிவாச ராஜா மற்றும் கே.டி. வெங்கடேசன் ஆகியோர், நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியில் தொடர்ந்து தங்களது வழிகாட்டுதலை வழங்க உள்ளனர்.
ராஜபாளையம் முதல் சர்வதேச சந்தை வரை: A2B கடந்து வந்த பாதை
ஒரு சிறிய இனிப்புக் கடையாகத் தொடங்கி, இன்று விரிவான கிளைகளைக் கொண்ட நிறுவனமாக A2B வளர்ந்துள்ளது:
- 1960-கள்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், நிறுவனர்களின் தந்தை கே.எஸ். திருப்பதி ராஜா ‘ஸ்ரீ குரு ஸ்வீட்ஸ்’ என்ற பெயரில் சிறிய இனிப்புக் கடையைத் தொடங்கினார்.
- 1975 – 1980: பெங்களூருவில் ‘ஸ்ரீ ஸ்ரீனிவாசா ஸ்வீட்ஸ்’ என்ற பெயரில் தொழில் நடத்திய அவர், 1980-இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் ‘ஸ்ரீ ஆனந்த பவன் ஸ்வீட்ஸ்’ கடையைத் தொடங்கினார்.
- 1980-களின் பிற்பகுதி: அடையார் பகுதிக்குத் தங்களது கிளையை விரிவுபடுத்தியபோது, அது ‘அடையார் ஆனந்த பவன்’ (A2B) எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 2000 – 2004: இனிப்பு, காரம் மற்றும் சாட் வகைகளைத் தொடர்ந்து, 2000-ஆம் ஆண்டில் முழுநேர உணவகத் துறையில் இறங்கியது. 2004-ஆம் ஆண்டில் புதுச்சேரியில் ‘A2B’ என்ற பெயரில் தனது முதல் உணவகத்தைத் தொடங்கியது.
விரிவாக்கத் திட்டங்கள்
தற்போது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 160 கிளைகளையும், அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் 30 சர்வதேசக் கிளைகளையும் A2B நடத்தி வருகிறது.
போதி ட்ரீ சிஸ்டம்ஸின் இந்த 180 மில்லியன் டாலர் முதலீடு, A2B நிறுவனத்தின் வர்த்தகத்தை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விரிவுபடுத்தப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


