Save 20% off! Join us newsletter and get 20% off for premium content!

உணவோடு ஒரு பயணம்! — வரலாறும் வணிகமும்

சமையல்: மனித மூளையை மாற்றிய முதல் ‘டெக்னாலஜி’ புரட்சி!

இந்த உலகம் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது? பணம், அந்தஸ்து, கார், பங்களா எனப் பட்டியல் நீளமாக இருந்தாலும், அதன் ஆதிப்புள்ளி நாம் உண்ணும் உணவுதான். மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இந்த ஒற்றைத் தேவைதான் ஒட்டுமொத்த மனித குலத்தின் இயக்கத்தையும் தீர்மானிக்கும் முதன்மைக் காரணியாக இருக்கிறது.

உயிர் வாழ்விற்கான உணவைத் தேடித்தான் ஆதிமனிதன் குகைகளை விட்டு வெளியே வந்தான்; காடுகளைக் கடந்து பயணித்தான். அந்தத் தேடலே அவனுக்கு வேட்டையாடக் கற்றுக்கொடுத்தது. மனித நாகரிகத்தின் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சிக்குப் பின்னாலும் இந்த உணவுக்கான தேடலே பிரதான உந்துசக்தியாக இருந்திருக்கிறது.

எப்படியானதொரு நீண்ட பயணம் உயிர்களின் ஆதாரமான உணவுக்கு! அன்று பசிக்காகக் காடுகளில் அலைந்த மனிதன் எங்கே! இன்று மொபைல் திரையைத் தட்டினால் 10 நிமிடங்களில் பிரியாணி வீட்டு வாசலுக்கு வரும் ‘குவிக் காமர்ஸ்’ யுகம் எங்கே! பசி ஆற்றுதல் என்ற அடிப்படைத் தேவையாக இருந்த உணவு, இன்று பல லட்சம் கோடிகள் புரளும் உலகளாவிய மாபெரும் வணிகமாக (Global Industry) மாறியது எப்படி? வாருங்கள், உணவின் ஆதி வரலாறு தொட்டு, அதன் நவீன பிசினஸ் தந்திரங்கள் வரை சுவாரசியமாக அலசும் மெகா தொடர் இதோ… உணவோடு ஒரு பயணம்! – வரலாறும் வணிகமும்

சமையல்: மனித மூளையை மாற்றிய முதல் டெக்னாலஜிபுரட்சி!

ஆரம்பத்தில், மனிதர்கள் மற்ற விலங்குகளைப் போலவே காடுகளில் கிடைத்த பச்சைக் காய்கறிகளையும், கனிகளையும், மாமிசத்தையும் மட்டுமே உண்டு வந்தனர். ஆனால், தற்செயலாக நெருப்பைக் கண்டுபிடித்து, உணவைச் சமைக்கத் தொடங்கிய அந்த நொடிதான் மனித குல வரலாற்றின் ஆகப்பெரிய திருப்புமுனை!

அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், சமைத்த உணவு மனித உடலுக்குள் சென்றதும் மிக எளிதாக ஜீரணமானது. பச்சையான உணவை மென்று ஜீரணிக்கவே நாள் முழுவதும் செலவிட்ட ஆதிமனிதனுக்கு, சமையல் முறையினால் நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது. அதே சமயம் குறைந்த உழைப்பில் அதிக ஆற்றலும் (Calories) கிடைத்தது. இந்த உபரி ஆற்றல்தான் மனித மூளையின் அளவைச் சடாரென வளரச் செய்தது.

மானிடவியல் அறிஞர்களின் கூற்றுப்படி, “சமைப்பதுதான் மனிதனை மனிதனாக்கியது” (Cooking made us human). அந்த மாற்றம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால்… இன்றும் பச்சையான உணவைத் தேடி அலைவதிலும், அதை மென்று உண்பதிலுமே நம் நாளின் பெரும்பாலான நேரம் கழிந்து, காடுகளிலேயே தேங்கிப் போயிருப்போம்!

நாம் இன்று அமைதியாக உட்கார்ந்து பிசினஸ் பிளான் போடுவதற்கும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும் ஆதிமனிதன் நெருப்பில் சுட்டு உண்ட அந்த முதல் உணவுதான் அடித்தளம்.

விவசாயம்: நதிக்கரைகளில் பிறந்த நாகரிகமும் பிசினஸும்!

உணவைத் தேடி அலைந்த நாடோடி வாழ்க்கை மனிதனுக்கு ஒரு கட்டத்தில் சலித்துப் போனது. “உணவைத் தேடி நாம் ஏன் தினமும் அலைய வேண்டும்? அதை நாமே ஏன் உருவாக்கக் கூடாது?” என்று மனிதன் சிந்தித்தபோதுதான் ‘விவசாயப் புரட்சி’ (Agricultural Revolution) பிறந்தது.

நெல், கோதுமை, தினை போன்ற தானியங்களை மனிதன் ஓரிடத்தில் பயிரிடத் தொடங்கியவுடன், அவனது நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பயிர்களைப் பராமரிக்கவும் அறுவடை செய்யவும் மனிதர்கள் நதிக்கரைகளில் குழுக்களாகச் நிரந்தரமாகக் குடியேறத் தொடங்கினர்.

விவசாயம் கிராமங்களை உருவாக்கியது; அந்த கிராமங்கள் பெருகி நகரங்களாகவும், பிரம்மாண்ட பேரரசுகளாகவும் உருவெடுத்தன!

தேவைக்கு அதிகமாக விளைந்த உணவுப் பொருட்கள், மனித குல வரலாற்றின் முதல் பிசினஸான ‘பண்டமாற்று முறை’ (Barter System) பிறப்பதற்கு வித்திட்டன.

ஆரம்பத்தில் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவையாக மட்டுமே இருந்த உணவு, இந்த தருணத்தில்தான் ஒரு ‘வர்த்தகப் பொருளாக’ (Commercial Commodity) பரிணமித்தது.

யாருடைய கையில் அதிக தானியம் இருந்ததோ, அவர்களே அன்றைய சமூகத்தின் செல்வாக்கு மிக்க மனிதர்களாகவும், அதிகார அமைப்புகளாகவும், முதல் தலைமுறை வணிகர்களாகவும் உருவெடுத்தனர்!

ஃபுட் ஹிஸ்டரி (The Food History)

$9.67 டிரில்லியன் டாலர் சாப்பாட்டுப் பேரரசு!

உணவைச் சமைக்கக் கற்றுக்கொண்ட மனிதன், நாடோடி வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்து நதிக்கரைகளில் குடியேறியது எப்படி? உலகின் முதல் பிசினஸான பண்டமாற்று முறையும் (Barter System), ரியல் எஸ்டேட்டும் எப்படி விவசாயத்தால் முளைத்தன?

அத்தியாயம் 2: நதிக்கரை நாகரிகங்களும் விவசாயப் புரட்சியும் — அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்!