ஆதிநாட்களில் ஐரோப்பியர்களின் தட்டுகளில் இருந்த உணவுகள் மிகவும் சப்பென்றிருந்தது, எந்தவொரு காரசாரமான சுவையுமின்றி இருந்தன. ஆனால், கீழை நாடுகளான இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் விளைந்த சில விசித்திரமான தாவரங்களின் விதைகள், வேர்கள் மற்றும் பட்டைகள் உணவின் சுவையை அப்படியே தலைகீழாக மாற்றும் மந்திரத்தைக் கொண்டிருந்தன. அவைதான் மசாலாப் பொருட்கள் (Spices).
நம்மூர் மிளகும், ஏலக்காயும், கிராம்பும் ஐரோப்பியர்களை எப்படிப் கவர்ந்திழுத்தன? உலக வரைபடத்தையே மாற்றி எழுதக் காரணமான அந்த மாபெரும் ‘மசாலாப் பாதை’ (The Spice Route) பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
கருப்புத் தங்கம்: மிளகுக்காகத் தொடங்கிய உலகப் போர்!
பண்டைய ரோமானியப் பேரரசு முதல் பிற்கால ஐரோப்பா வரை, இந்தியாவின் மலபார் கடற்கரையில் (இன்றைய கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகள்) விளைந்த கருமிளகிற்கு (Black Pepper) அசுர மதிப்பு இருந்தது.
உணவின் சுவையை கூட்டுவது மட்டுமின்றி, மாமிசங்கள் கெட்டுப்போகாமல் அதன் வாசனையைத் தக்கவைக்க மிளகு பெரிதும் உதவியது. இதனால் ஐரோப்பியச் சந்தைகளில் மிளகு, ‘கருப்புத் தங்கம்’ (Black Gold) என்று அழைக்கப்பட்டது.குளிர் காலத்தில் கால்நடைகளை வெட்டிச் சேமிக்கும் மாமிசம் கெட்டுப்போகாமல் இருக்கவும், சுவையூட்டவும் மிளகு அத்தியாவசியமானது.
ஐரோப்பியச் சந்தைகளில் மிளகு ‘கருப்புத் தங்கம்’ என்று அழைக்கப்பட்டது. நிலம் வாங்குவதற்கும், வரிகளைச் செலுத்துவதற்கும், வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்கும் கூட மிளகு மணிகளையே பணமாகப் பயன்படுத்தினர். கி.பி. 410-இல் ரோமானியப் பேரரசின் வீழ்ச்சியின் போது, அலாரிக் (Alaric) என்ற விசிகோத் மன்னன் (VISIGOTH) ரோமை முற்றுகையிட்டபோது, போரை நிறுத்தப் பொன், பொருளுடன் சேர்த்து 3,000 பவுண்ட் கருமிளகைத் திறையாகக் கேட்டான் என்றால் அதன் மதிப்பை யோசித்துப் பாருங்கள்!
ஏலக்காய், கிராம்பு மற்றும் சாதிக்காய் போர்

மிளகு மட்டுமல்லாது, ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய் ஆகியவற்றுக்கும் ஐரோப்பாவில் கடும் கிராக்கி நிலவியது. 17-ஆம் நூற்றாண்டில் லண்டனில் பரவிய கொடூரமான பிளேக் நோயைக் குணப்படுத்த சாதிக்காய் உதவும் என்ற வதந்தி பரவியது. இதனால் சாதிக்காயின் விலை தங்கத்தை விடப் பல மடங்கு உயர்ந்தது.
இந்தோனேசியாவின் ‘ரண்’ என்ற சிறிய தீவில் மட்டுமே விளைந்த சாதிக்காயைக் கைப்பற்ற டச்சுக்காரர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இடையே கடும் போர் நடந்தது. இறுதியில், அந்தச் சிறிய தீவுக்காகத் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த ‘நியூ ஆம்ஸ்டர்டாம்’ என்ற தீவையே டச்சுக்காரர்களுக்கு விட்டுக்கொடுத்தது பிரிட்டன். அந்த நியூ ஆம்ஸ்டர்டாம் தான் இன்றைய நியூயார்க் நகரம்!
மசாலாப் பாதையும் உலகப் பயணமும் (The Spice Route)
இந்த மசாலாப் பொருட்கள் கிழக்கிலிருந்து மேற்கே உள்ள நாடுகளுக்குக் கடல் வழியாகவும், நிலம் வழியாகவும் கொண்டு செல்லப்பட்டன. இதுவே வரலாற்றில் ‘மசாலாப் பாதை‘ (Spice Route) என்று அழைக்கப்படுகிறது.
தொடக்கத்தில் இந்த வர்த்தகம் அரேபிய வணிகர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் இந்தியாவிலிருந்து மசாலாக்களை வாங்கி, அதை ஐரோப்பியர்களிடம் பல மடங்கு அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்தனர். மசாலாக்கள் எங்கிருந்து வருகின்றன என்ற ரகசியத்தை அவர்கள் யாருக்கும் சொல்லவில்லை.ரகசியத்தை உடைக்காமல் இருக்க, இவற்றை ஆட்கொல்லிப் பறவைகளும், பறக்கும் நாகாசுரங்களும்தான் காத்து வருகின்றன; பெரும் ஆபத்தைச் சந்தித்துதான் இவற்றை எடுத்து வருகிறோம் என அரேபியர்கள் கட்டுக்கதைகளை நம்ப வைத்தனர்.

“இனி இவர்களிடம் ஏமாற முடியாது; மசாலா விளையும் இந்தியாவிற்கு நாமே நேரடியாகக் கடல் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று ஐரோப்பிய அரசுகள் தங்களின் மாலுமிகளை ஸ்பான்சர் செய்து கடலுக்குள் அனுப்பின.
1453-இல் கான்ஸ்டான்டிநோபிள் நகரம் ஓட்டோமான் துருக்கியர்களிடம் வீழ்ந்தபோது, ஐரோப்பியர்களுக்கான நிலவழி மசாலாப் பாதை முழுமையாக அடைக்கப்பட்டது.
புதிய உலகைக் கண்டுபிடித்த சுவை வேட்டை
ஸ்பெயின் நாட்டின் ஆதரவோடு இந்தியாவைத் தேடி மேற்கு நோக்கிய கடற்பயணத்தைத் தொடங்கிய கிறிஸ்டோபர் கொலம்பஸ், 1492-இல் தற்செயலாக அமெரிக்க கண்டத்தைக் கண்டறிந்தார். அங்குள்ள மக்களை ‘ரெட் இந்தியன்ஸ்’ என்றும், அங்கு கண்ட காரமான காயை ‘ரெட் பெப்பர்’ (மிளகாய்) என்றும் தவறாகப் பெயரிட்டார்.
தொடர்ந்து, போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா, ஆப்பிரிக்க கண்டத்தைச் சுற்றிப் பயணித்து, இறுதியாக 1498 மே 20 அன்று இந்தியாவின் கோழிக்கோடு கடற்கரையை வந்தடைந்தார். நாம் பள்ளிக்கூடத்தில் படித்த ஒட்டுமொத்த ‘புவியியல் கண்டுபிடிப்புகளின் காலம்’ (Age of Discovery) மற்றும் உலக வரைபடத்தின் விரிவாக்கம் என அனைத்தும், நம்மூர் சமையலறை மசாலாப் பொருட்களுக்காக கார்ப்பரேட் நாடுகள் நடத்திய வேட்டைதான்!
நாம் பள்ளிக்கூடத்தில் படித்த ஒட்டுமொத்த ‘புவியியல் கண்டுபிடிப்புகளின் காலம்’ (Age of Discovery) மற்றும் உலக வரைபடத்தின் விரிவாக்கம் என அனைத்தும், நம்மூர் சமையலறை மசாலாப் பொருட்களுக்காக கார்ப்பரேட் நாடுகள் நடத்திய வேட்டைதான்!
காலனியாதிக்கத்தின் தொடக்கம்
மசாலாப் பொருட்களின் மீதான அதீத மோகம், வெறும் வர்த்தகத்தோடு நின்றுவிடவில்லை. இந்தியாவிற்கு நேரடியாகக் கடல் வழி தெரிந்தவுடன் போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் அடுத்தடுத்து இந்தியாவிற்குள் நுழைந்தனர்.
வணிகம் செய்ய வந்த பிரிட்டிஷ் ‘கிழக்கிந்திய நிறுவனம்‘ (East India Company), மசாலா வர்த்தகத்தைக் கைப்பற்றத் தொடங்கி, மெல்ல மெல்ல நம் ஒட்டுமொத்த நாட்டையே அடிமைப்படுத்தியது. மனிதனின் நாவிற்குப் பிடித்த ‘சுவை’ என்ற ஒற்றை உணர்வு, ஒரு மாபெரும் துணைக் கண்டத்தின் சுயாட்சியையே மாற்றியமைத்த சுவாரசியமான, அதே சமயம் துயரமான வரலாறு இது.
மனிதனின் நாவிற்குப் பிடித்த ‘சுவை’ என்ற ஒற்றை உணர்வும், உணவைப் பதப்படுத்தத் தேவைப்பட்ட எளிய தேவையும் சேர்ந்து, உலக நாடுகளின் எல்லைகளை மாற்றியமைத்தன. புதிய கண்டங்கள் கண்டுபிடிக்கப்படவும், மாபெரும் சாம்ராஜ்யங்கள் வீழ்ந்து காலனியாதிக்கம் என்ற புதிய அடிமை முறை பிறக்கவும் காரணமானது.
நமது சமையலறையில் அஞ்சறைப் பெட்டிக்குள் இருக்கும் மிளகும் ஏலக்காயும், வெறும் நறுமணப் பொருட்கள் அல்ல; அவை உலக வரலாற்றையே மாற்றி எழுதிய வரலாற்றுச் சின்னங்கள்!
ஃபுட் ஹிஸ்டரி (The Food History) –
ஒரு தீவிற்குப் பதிலாகக் கைமாறிய மசாலா!
1667-ஆம் ஆண்டில், டச்சு (Oman) மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யங்களுக்கு இடையே ஒரு விசித்திரமான ஒப்பந்தம் நடந்தது. ஜாதிக்காய் (Nutmeg) அமோகமாக விளையும் இந்தோனேசியாவின் 'ரன்' (Run Island) என்ற சிறிய தீவை டச்சுக்காரர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் எடுக்க விரும்பினர்.
அதற்குப் பதிலாக பிரிட்டிஷ்காரர்களிடம் அமெரிக்காவில் இருந்த தங்களின் ஒரு சதுப்புநிலத் தீவைக் கைமாற்றிக் கொடுத்தனர். அந்தத் தீவுதான் இன்றைய உலகின் மிக பிரம்மாண்டமான நிதி மையமான நியூயார்க் (Manhattan, New York)! ஆம், ஒரு மசாலாவிற்காக நியூயார்க் நகரமே கைமாறியிருக்கிறது!
பிசினஸ் ஃபேக்ட் (The Business Fact) – மசாலாச் சந்தையின் இன்றைய அசுர மதிப்பு!
அன்று உலகப் போர்களுக்கே வித்திட்ட இந்த மசாலாப் பிசினஸ், இன்றும் உலக அளவில் ஒரு மாபெரும் வர்த்தகத் துறையாகவே நீடிக்கிறது. சர்வதேசத் தரவுகளின்படி, உலகளாவிய மசாலாச் சந்தையின் (Global Spices Market) ஒட்டுமொத்த மதிப்பு நடப்பு 2026-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் $23 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் உலகளவில் மசாலாப் பொருட்களை உற்பத்தி செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் நம் இந்தியாதான் இன்றும் முதலிடத்தில் உள்ளது பெருமைக்குரிய விஷயம்!











Leave a Reply