உலகளாவிய மின்னணு மற்றும் தொழில்நுட்பச் சந்தையில் இந்தியா தன்னை ஒரு வல்லரசாக நிலைநிறுத்த அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. ‘செமிகான் இந்தியா 1.0’ (Semicon India 1.0) வெற்றிகரமாக அடித்தளம் அமைத்ததைத் தொடர்ந்து, இப்போது ₹1.27 லட்சம் கோடி மதிப்பீட்டில் ‘செமிகான் 2.0’ திட்டத்தை இந்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இந்த புதிய திட்டத்தின் கீழ் இந்தியா நிர்ணயித்துள்ள இலக்குகளும், உருவாக்கவுள்ள தொலைநோக்குத் திட்டங்களும் தொழில்நுட்ப உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
200 சிப் டிசைன் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள்
செமிகான் 1.0 திட்டத்தில் 105 ஸ்டார்ட்அப்கள் பங்கேற்ற நிலையில், செமிகான் 2.0 மூலம் குறைந்தபட்சம் 200 சிப் டிசைன் (Chip Design) நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களை இந்தியாவில் உருவாக்குவதே பிரதான இலக்காகும். இந்தியாவில் பிரத்யேகமாக சிப்களை வடிவமைப்பு செய்யும் இந்த நிறுவனங்களுக்குத் தேவையான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகள் முழுமையாக அளிக்கப்படவுள்ளன.
1 லட்சம் புதிய தொழில் நுட்பப் பணியாளர்கள் (Semicon Workforce)
தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி அலகுகளுக்குத் (Fabs) தேவையான மனிதவளத்தை உருவாக்க மிகப்பெரிய பயிற்சித் திட்டம் தொடங்கப்படுகிறது. கிளீன் ரூம் (Clean Room) தொழில்நுட்ப வல்லுநர்கள், ஃபேக்டரி-ஃப்ளோர் பணியாளர்கள் மற்றும் இன்ஜினியர்கள் என சுமார் 1 லட்சம் பேருக்கு செமிகண்டக்டர் சார்ந்த பிரத்யேகப் பயிற்சிகள் வழங்கி, இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்ற திறமையான பணியாளர்களாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செமிகான் 2.0-வின் 6 முக்கியத் தூண்கள் (6 Pillars)
இந்த பிரம்மாண்ட திட்டம் வெறும் சிப் தயாரிப்போடு நின்றுவிடாமல் முழுமையான ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை (Ecosystem) உருவாக்க ஆறு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது:
- சிப் வடிவமைப்பு (Chip Design)
- செமிகண்டக்டர் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் (Equipment & Materials)
- உற்பத்தி அலகுகள் (Wafer Fabs)
- மேம்பட்ட பேக்கேஜிங் (Advanced Packaging / OSAT)
- தொழில்-கல்விசார் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (Applied R&D)
- மனிதவள மேம்பாடு (Talent Development)
சீனா, தைவான் போன்ற நாடுகளை மட்டுமே நம்பியிருந்த செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியில் (Supply Chain), இந்தியா இப்போது தனக்கான தவிர்க்க முடியாத இடத்தை உருவாக்கி வருகிறது. வடிவமைப்பு முதல் தயாரிப்பு வரை அனைத்துப் படிகளையும் நாட்டிற்குள்ளேயே கொண்டுவருவதன் மூலம், எதிர்கால டிஜிட்டல் உலகின் தவிர்க்க முடியாத மையமாக இந்தியா உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.










Leave a Reply