இசை, இறைவன் மனிதர்களுக்கு அளித்த பெரும் கொடை, எந்திரங்கள் போல ஓடிக்கொண்டிருக்கும் மனிதகுலத்திற்க்கு உயிர்ப்பை தந்துகொண்டிருப்பது இசை. இந்த பூமியில் இசைக்கெனவே பிறந்து இசையை சுவாசித்து இசையுலகில் பெரும் சாதனைகள் புரிந்து இசையை அள்ளி அள்ளி வழங்கிய மாமேதைகள், இசை பிதாமகர்கள் பாரம்பர்ய இசையிலும், திரை இசையிலும் ஏராளம் பேர் உண்டு.
மேற்கத்திய உலகில் பீத்தோவான் மொசார்ட் முதல் இந்திய இசையில் கோலோச்சிய தான்சேன், உஸ்தாத் அலி அக்பர் கான், பிஸ்மில்லா கான், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஆர்.டி.பர்மன், எஸ்.டி.பர்பன், மதன் மோஹன், கண்டசாலா, பாலமுரளி கிருஷ்ணா, கே.வி. மஹாதேவன், எம் எஸ் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, ஏ.அர்.ரஹ்மான் என்று வரிசை நீளும்.
அப்படி இந்திய இசை உலகில் சாதனைகள் புரிந்துகொண்டிருக்கும் தனித்துவமான பேராளுமை இசைஞானி இளையராஜா. பாரம்பரிய இசை, திரை இசை என்று இரு வேறு துருவங்களில் இருந்த இசையை ஒரே துருவமாக்கி திசையாக்கி இசையின் அடையாளம் ஆனவர் இசைஞானி.
தனது இசைகோர்வைகளில் ரசிகனின் செவியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் இசையை அவர் வழங்கினார்.
கர்நாடக, இந்துஸ்தானி, மேற்கத்திய , கிராமிய மற்றும் பழங்குடிகளின் இசை என்று வேறு வேறு வடிவங்களின் இசையை ஒரே பாடலுக்குள் கொண்டு வரும் வல்லமை அவருக்கு மட்டுமே உண்டு.
70 களின் மத்தியில் துவங்கிய அவரது இசை பயணம் 80, 90 களில் உச்சம் தொட்டது அவர் தந்த இசை காலத்தால் அழியாதது.,இசையின் நிலப்பரப்பை முழுவதும் தனதாக்கி கொண்டு ராஜாங்கம் நடத்தினார் அவர்.
முள்ளும் மலரும் திரைப்படத்தில் ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா’ பாடலில் இயற்கையை இசைக்குள் கொண்டு வந்தார் வார்த்தைகளுக்கு இருக்கும் அர்த்தங்களை இசையின் மூலம் வலிமைபடுத்தி சில நேரம் வருடிக்கொடுத்தார் . யேசுதாஸின்குரலில் அந்த பாடலின் துவக்கத்தில் வரும் ஹம்மிங் இயற்கையினூடே ஓர் பயணத்திற்க்கான துவக்கத்தை உணர்த்தி நமக்குள் புகுத்தி விடும். ‘வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ ‘ என்ற இந்த வரிகள் வளைந்து நெளிந்து வரும் இசையும் மெட்டும். புல்லாங்குழலும், தபேலாவும், வயலினும் இன்னபிற இசை கருவிகளும் அவர் இசையின் வர்ணஜலத்தை நிகழ்த்திகாட்டியிருப்பார். அவர் குரலில் இழையும் ‘ஜனனி ஜனனியும், நான் தேடும் செவந்திப்பூவிது’ம் உருகி உருகி மெய் மறக்கச்செய்யும்.
கால தேச வர்த்தமானங்களை தன் இசையினுள் புகுத்தி ரசிகர்களை அதை உணரச்செய்யும் ஒரு மாயவித்தைக்காரர் இசைஞானி. நிழல்கள் திரைப்படத்தில் வரும் ‘இது ஒரு பொன்மாலை பொழுது’ பாடலை நடுநிசியில் கேட்டாலும் வெய்யில் பொங்கி வழியும் ஒரு உச்சி வெயிலில் கேட்டாலும் ஒரு பொன்மலை பொழுத்தில் உலவும் ஓர் பேருணர்வை இசையின் வழியே கேட்பவர்களுக்கு கடத்தி இருப்பார். இசை கருவிகளோடு எஸ்.பி.பி எனும் தேன் குரலை கலந்து அப்படியே நம் உயிருக்குள் ஊற்றி ஓர் இசை ராஜாங்கமே நடத்தி இருப்பார்.
உல்லாசப்பறவைகளில் ‘ஜெர்மனியின் செந்தேன்மலரே’, ப்ரியா திரைப்படத்தின் ‘என் உயிர் நீதானே உன் உயிர் நான்தானே விலும், ஜெர்மனியிலும் சிங்கப்பூரிலும் நாமே உலவிக்கொண்டிருக்கும் ஒர் உணர்வை அந்த பாடல்கள் நமக்கு தரும்.
பொதுவாக ஆண்கள் தங்களது வெட்கத்தை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்கள், அந்த வெட்கத்தையும் பொங்கி வழியும் காதலையும் ‘காதலின் தீபமொன்று ஏற்றினாலே என் நெஞ்சில்’, பாடலும் ‘ராஜ ராஜ சோழன் நான்’பாடலிலும் ஒரு இசையை பிரவாகமாக பொங்கி உள்ளம் நிறைத்து, இன்று வரை காதலனின் தேசிய கீதம் ஆகி போனது .
பெண்ணின் மனதில் பொங்கும் காதலின் தவிப்பை சொன்ன பாடல்கள் ஏராளம் அதில் குறிப்பாக ஜானகி அம்மாவின் ‘பொன்வானம் பன்னீர்தூவுது இந்நேரம்’ பாடலும் சத்ரியன் திரைப்படத்தில் சுவர்ணலதாவின் குரலில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச’ பாடலையும் கேட்க்கும் ஆண்களின் மனதிற்குள் பெண்ணின் மென் உணர்வுகளை உணரச்செய்யும் ஒரு மந்திரம் செய்திருப்பார் இசைஞானி.
கல்லும் முள்ளும் குண்டும் குழியுமான பல திரைப்படங்களை தன் இசைகொண்டு செப்பனிட்டு சூப்பர் ஹிட் படங்களாக்கி இருக்கிறார் .
‘வலையோசை கல கல’ , ‘இதழில் கதை எழுதும் நேரமிது’
‘பனிவிழும் மலர்வனம்’ ., ‘எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்களும்’,
80′ 90 கிட்ஸ்களுக்கு அந்த பாடல்களின் அருமை புரியும், நீண்ட தூர பயணங்களில் எதிர்பாராத நேரத்தில் ஒலிக்கும் பாடல்கள் கேட்கும் கணப்பொழுதுகளில், காதலனோ, காதலியோ உடன் இல்லாத தருணங்களில்கூட அவர்களோடு சேர்ந்து மெல்லிய மழையில் நனையும் ஓர் உணர்வை தந்து நமக்கான ஒர் உலகத்தை ஸ்ருஷ்டித்து தந்திருப்பார்.
பின்னணி இசைக்கோர்ப்பில் இளையராஜாவின் சாதனை அளவிடமுடியாதது, ஒரு திரைப்படத்திற்கு பின்னணி இசையின் முக்கியத்துவத்தை இளையராஜா இசையமைத்த திரைப்படங்களில் இருந்ததே உணரலாம். ஒரு கதாபாத்திரத்தின் தன்மைகளையும், உணர்வுகளையும் அந்த காட்சியின் தாக்கத்தையும் இசையின் மூலமே காண்பிக்கும் ஆற்றல் அவரின் இசைக்கு உண்டு, சில காட்சிகளில் மௌனத்தையும் இசையாக்கி இருப்பார்.
16 வயதினிலே, மூன்றாம் பிறை, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், மூடுபனி, மௌனராகம், நாயகன், அபூர்வ சகோதரர்கள், பிரம்மா, கோபுர வாசலிலே, சின்னத்தம்பி, சத்ரியன், முதல் மரியாதை, அஞ்சலி, தளபதி, புன்னகை மன்னன், இதயம், கேப்டன் பிரபாகரன், சிந்து பைரவி இன்னும் இன்னும் எத்தனை எத்தனை திரைப்படங்களில் மிரட்டிருப்பார், அழவைத்திருப்பார், சிரிக்க வைத்திருப்பார்.
அவர் பயன்படுத்தும் இசை கருவிகளில் இருந்து வெளிப்படும் இன்னிசை கலவை கேட்பவர்களை வேறொரு உலகத்திற்கு இட்டுச்செல்லும், குறிப்பாக புல்லாங்குழல், வயலின், கிட்டார், இன்னும் சாதாரண ரசிகர்களுக்கு முன்பு பெயர் தெரிந்திராத இசைகருவிகளை பற்றி அதன் தனித்ததுவத்தை அவர்களுக்கு தெரிய செய்து , இசை நுணுக்கங்களையும் ரசிகர்களுக்கு புரிய வைக்கும் ஒரு பேராற்றல் அவருக்கு உண்டு. இன்டெர்லூட்களையும் (interlude) ப்ரீலூட்களையும் (prelude) பற்றி பேசவைத்து ரசிகர்களின் மனங்களில் தாளங்களையும், ராகங்களையும் தவழசெய்த ராகதேவன், இசைஞானி.
ஒர் யுகத்திற்க்கான இசையை அவர் வழங்கி இருக்கிறார், தமிழர்களின் அடையாளமாகவும், தன்னை நிலை நிறுத்தியிருக்கும் இசைஞனியை பற்றியும் இசையை பற்றியும் எழுதவும் பேசவும் இன்னும் இன்னும் ஏராளம் உண்டு., இணைந்திருப்போம் இசையோடு.