இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக அரங்கில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வருகிறது. குறிப்பாக, புத்தாக்க சிந்தனைகள் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்த வரிசையில், நாட்டின் Deep-Tech தொழில்நுட்ப துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் தலைசிறந்த 100 டீப்-டெக் ஸ்டார்ட்அப்களை அடையாளம் கண்டு ஆதரவளிக்கும் ஒரு மகத்தான திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
“ஸ்டார்ட்அப் பாலிசி ஃபோரம்” (Startup Policy Forum) #100DesiDeepTechs என்ற பன்முக பங்குதாரர் திட்டத்தை “ஸ்டார்ட்அப் இந்தியா (DPIIT)”, “MeitY ஸ்டார்ட்அப் ஹப்” மற்றும் “ஐஐடி மெட்ராஸ்” ஆகியவற்றுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம், நாட்டின் டீப்-டெக் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், கொள்கை ரீதியான உரையாடல்களை மேம்படுத்துவதற்கும் ஒரு பாலமாக அமையும்.
இத்திட்டத்தின் முக்கியத்துவம் என்ன?
டீப்-டெக் ஸ்டார்ட்அப்கள் என்பது அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. இவை நீண்டகால வளர்ச்சி சுழற்சியைக் கொண்டுள்ளன. மேலும், குறைந்தபட்ச செயல்படும் தயாரிப்பை (Minimum Viable Product) உருவாக்குவதற்கும், வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கும் கணிசமான மூலதனம் தேவைப்படும். இத்தகைய ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியா பல முக்கிய துறைகளில் உலகளாவிய தலைமைத்துவத்தை எட்டும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்த பிரத்யேக திட்டத்தில் சேர இந்தியாவின் டீப்-டெக் ஸ்டார்ட்அப்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்அப்கள், கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், துறைசார் ஒழுங்குமுறை அமைப்புகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து, ஆழமான தொழில்நுட்ப உரையாடல்களில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறும்.


இலக்குகள் மற்றும் பயன்கள்:
- கொள்கை மேம்பாடு: இந்த கலந்துரையாடல்களின் மூலம், டீப்-டெக் துறையில் உள்ள சவால்கள் மற்றும் ஒழுங்குமுறை பரிந்துரைகளை கோடிட்டுக் காட்டும் ஒரு விரிவான கொள்கை வெள்ளை அறிக்கை உருவாக்கப்படும்.
- ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்: அனுபவம் வாய்ந்த நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட ஒரு வழிகாட்டி வாரியம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களுக்குயுக்தி சார்ந்த வழிகாட்டுதலையும், நெட்வொர்க் அணுகலையும் வழங்கும்.
- முதலீடுகளை ஈர்ப்பது: ₹1 லட்சம் கோடி ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு (RDI) திட்டம் மற்றும் பிரத்யேக டீப்-டெக் நிதி போன்ற அரசாங்கத்தின் பிற முயற்சிகளுடன் இணைந்து, இந்த திட்டம் டீப்-டெக் ஸ்டார்ட்அப்களுக்கு தேவையான நிதியை ஈர்க்க உதவும்.
- முக்கிய துறைகளில் கவனம்: குறைக்கடத்திகள் செமிகண்டக்டர்ஸ் (semiconductors), பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், குவாண்டம் தொழில்நுட்பம் (quantum technology), பசுமை ஹைட்ரஜன் (green hydrogen), விண்வெளித் தொழில்நுட்பங்கள் (space technologies), ட்ரோன்கள்(drones), மின்சார வாகனங்கள் (EVs), உயிரி தொழில்நுட்பம் (biotechnology), ரோபாட்டிக்ஸ் (robotics), மேம்பட்ட உற்பத்தி மற்றும் தகவல் தொடர்பு போன்ற முக்கிய டீப்-டெக் துறைகளில் கவனம் செலுத்தப்படும்.
எதிர்காலப் பார்வை:
இந்தியா, ஸ்டார்ட்அப் பயணத்தின் அடுத்த கட்டமாக டீப்-டெக் துறையை கருதுகிறது. அறிவியல் மற்றும் அளவிடக்கூடிய புத்தாக்கத்தின் சந்திப்பில் உள்ள ஸ்டார்ட்அப்களை அடையாளம் கண்டு ஆதரிப்பதன் மூலம், நாட்டின் வியூக ரீதியான நலன்களுக்கு உதவும் கட்டமைப்புகளை உருவாக்க முடியும் என்று MeitY ஸ்டார்ட்அப் ஹப் தலைமை நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மதன கோபால் தெரிவித்துள்ளார். ஐஐடி மெட்ராஸ்-ன் பேராசிரியர் தில்லை ராஜன், “டீப்-டெக் ஸ்டார்ட்அப்கள் கொள்கை உருவாக்கும் பணிகளில் நேரடியாகப் பங்கேற்பது ஒரு தேசிய முயற்சிக்கு உற்சாகமளிப்பதாகக் “குறிப்பிட்டார்.
இந்த #100DesiDeepTechs திட்டம், இந்தியாவின் டீப்-டெக் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி, உலகத் தரம் வாய்ந்த கண்டுபிடிப்புகளையும், தீர்வுகளையும் உலக அரங்கில் கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் ஒரு முக்கிய உந்துசக்தியாக அமையும்.
Leave a Reply